கூலித் தொழிலாளர் குடும்பப் பெண் பிள்ளைகளின் திருமணத்தின்போது, 'தாலிக்கு தங்கம்', திருமணச் செலவுக்கு 'உதவித் தொகை' வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஏழைப் பட்டதாரி பெண்களாக இருந்தால், திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் அளிக்கப்படுகிறது. அதேபோல், +2 பள்ளிப் படிப்பு மட்டும் படித்த பெண்களாக இருந்தால், ஒரு பவுன் தங்கம், ரூ.24 ஆயிரம் உதவித்தொகை என சமூக நலத்துறை மூலம் தமிழக அரசு வழங்குகிறது .
கடலூர் மாவட்டத்தில், சுமார் 13 ஊராட்சி ஒன்றியங்களில் எஸ்.எஸ்.எல்.சி படித்த பெண்கள், பட்டதாரிப் பெண்கள், திருமண உதவி கேட்டு, அனைத்துச் சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். அசல் சான்றிதழை, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள சமூக நல விரிவாக்க அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.
விண்ணப்பத்தைப் பெற்ற வட்டார விரிவாக்க அலுவலர்கள், நேரில் சென்று ஆய்வு செய்து, உதவிகேட்டு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு தொடர் பதிவெண் வழங்கியுள்ளனர். இந்தப் பதிவேடுகளின் படி, திருமண உதவித் திட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
2019 ஜூலை மாதத்திற்குப் பிறகு, தற்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் தினம், தினம் வட்டார விரிவாக்க அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகின்றனர். கடன்பட்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் பெரும் உதவியாக இருக்கும்.
அந்த உதவியை, விரைவில் தவிக்கும் பெற்றோர்களுக்குக் கிடைக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி, பதிவு செய்தவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிசெய்ய வேண்டும் என ஏக்கத்தோடு வேண்டுகோள் விடுகின்றனர், பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்.