
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை செப்டம்பர் 18-க்குள் வெளியிட வேண்டும் என்றும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காலக்கெடுவுக்குள் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகருக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு சட்டப்பிரிவு 28-ன் கீழுள்ள பிரிவுகளை தமிழக அரசு நீக்கியதும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடியாததுமே காரணம் என விளக்கமளித்திருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அட்டவணையை தாக்கல் செய்ய வில்லை என்றால் மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். எனவே இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.