கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் இன்று மாலை ஏற்றப்பட்டுள்ளது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள உச்சி விநாயகர் கோவில் மேடையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் மதுரை கள்ளழகர் மலை மீதுள்ள வெள்ளிமலை கோம்பையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருத்தணி மலை கோயிலுக்கு எதிரே உள்ள பச்சரிசி மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் கோபுரத்தில் மகா அகல் விளக்கு ஏற்றப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஐந்து அடி உயர செப்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பழனியிலும் தீபம் ஏற்றப்பட்டது. இவ்வாறாக தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோவில்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.