திட்டமிட்டு காதலிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கூட்டாக தற்கொலைக்கு முயன்றதாக போலி நாடகமாடிய இளைஞரை ஒரு மாதம் கழித்து திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் பத்தாம் தேதி திருவல்லிக்கேணி மியான் சாகிப் தெருவில் உள்ள டிஎம்சி விடுதியில் காதல்ஜோடி ஒன்று அறை எடுத்துத் தங்கியது. அவர்கள் தங்கி இருந்த அறை கதவு அடுத்தநாள் வரை திறக்கப்படாமல் இருந்ததால் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இளம்பெண் கட்டிலில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் அருகில் இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை அறிந்து போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞர் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கூட்டாக தற்கொலை செய்து கொள்ள முயன்று கடைசியில் விஷம் அருந்தியதில் காதலி மட்டும் உயிரிழந்ததாகவும் காதலன் உயிருக்குப் போராடி தவித்து வந்ததாகவும், இந்த வழக்கில் இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து காதலன் எதிர்பாராத விதமாக உயிர் பிழைத்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ஆனால் விசாரணையில் அந்த இளம்பெண் கொல்லப்பட்டது தெரிய வந்தது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சுந்தர் சிங் மற்றும் கல்லூரி மாணவியான காஜல் ஆகிய இருவரும் 3 வருடமாக காதலித்து வந்த நிலையில் அவரது வீட்டில் பெற்றோர்கள் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஒன்றாக சேர்ந்து வாழதான் முடியவில்லை ஒன்றாக இறந்து விடலாம் என இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருவல்லிக்கேணியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
மேலும் இருவரும் ஒரேநேரத்தில் உயிரிழக்க வேண்டும் என்பதற்காக சயனைடு விஷத்தை இணைத்தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். முதலில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத சமர் சிங் காஜலின் தொடர் வற்புறுத்தலினால் தற்கொலைக்கு ஒத்துக்கொண்டான். தங்க நகை வியாபாரம் செய்வதாகவும் தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாகவும் கூறி அதை அரை கிலோ அளவுக்கு ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சயனைடு கையில் கிடைத்தவுடன் கடந்த மாதம் ஜூன் மாதம் பத்தாம் தேதி அந்த காதல் ஜோடி திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்து நெருக்கமாக பொழுதை கழித்துவிட்டு மறுநாள் குளிர்பானத்தில் சயனைடை கலந்து குடிக்க முடிவெடுத்திருந்தனர். முதலில் காதலியான காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிக்க அந்த இறுதி நேரத்தில் மனம் மாறியுள்ளான் சுமர் சிங். மனம் மாறியதும் தற்கொலை முடிவில் பின்வாங்கி அவன் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல் பாவனை காட்டியுள்ளான். இதை கவனித்த காதலி இதுபற்றி கேட்ட பொழுது எங்கே இவள் உயிர் பிழைத்துவிட்டால் உண்மையாகவே குளிர்பானத்தை குடித்த சொல்வாளோ என்ற பயத்தில் துப்பட்டாவால் காஜலின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக சுமார் சிங் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளான்.
விடுதி அறையில் சம்பவத்தன்று போலீசார் சென்று பார்த்த பொழுது சயனைட் கலந்த குளிர்பானத்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடுவது போல் பாவனை செய்துள்ளான் சுமர். சயனைட் பவுடரை குளிர்பானத்தில் கலந்த பொழுதும், அதை வாய் அருகே வைத்துக் குடிப்பது போல் நடித்த போதும் அந்த நெடி அவனது உடலுக்குள் சென்றதால் சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டதே தவிர அவன் விஷயத்தை அருந்த வில்லை என்பதும், காதலி தப்பித்துவிட்டால் மீண்டும் தற்கொலைக்குத் தூண்டுவாள் என்று எண்ணி காதலியை கொலை செய்து விட்டு நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கில் காதலியை கொலை செய்ததாக சுமார் சிங்கை ஒரு மாதம் கழித்து கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார் அவனை புழல் சிறையில் அடைத்தனர்.