
சேலத்தில் விளையாட்டு பூங்காக்களை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சக கட்சியினருடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடினார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் 12 இடங்களில் ரூ.5 கோடியில் பசுமைவெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிறுவர்கள், முதியோர், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் வகையிலும் நவீன பூங்காக்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, பசுமைவெளி பூங்காக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 31, 2018) திறந்து வைத்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்கேற்ற பேட்டரி வாகனங்களையும் துவக்கி வைத்தார்.
அம்மாபேட்டை அய்யாசாமி பசுமைவெளி பூங்காவில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து மைதானத்தைப் பார்வையிட்டார். அப்போது கட்சியினர், இறகுப்பந்து விளையாடி, மைதான பயன்பாட்டை துவக்கி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராக்கெட் மட்டையால் இறகுப்பந்தை லவ்-ஆல் சர்வீஸ் செய்தார்.
அவருடன் சேலம் எம்.பி. பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டு இறகுப்பந்தை தட்டி விட்டார். எதிர் முனையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன் பந்தை சர்வீஸ் செய்தார். முதல்வர் ஆர்வமாக இறகுப்பந்து விளையாடியதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் கைத்தட்டி ரசித்தனர்.
இதையடுத்து நேரு கலையரங்கத்தில் நடந்த சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பள்ளிகள்தோறும் சாலை பாதுகாப்புக்குழு பணியில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கினார்.