ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் கடலூரைச் சேர்ந்த ஐந்து பட்டியலின இளைஞர்கள் பணியாற்றிவந்துள்ளனர். இவர்களில் ராஜேஷ் குமார் என்ற இளைஞர் திருப்பூர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய வடமாநில பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார். அந்த நிறுவன உரிமையாளர், ராஜேஷ் குமார் பணியாற்றிய நிறுவன உரிமையாளரிடம் விவரத்தைக் கூறி விசாரிக்கச் சொன்னதாக தெரிகிறது.
இதையடுத்து காதல் தம்பதிகள் இருக்கும் இடத்தைக் கேட்டு ராஜேஷ் குமாருடன் பணிபுரிந்த கடலூரைச் சேர்ந்த பூவரசன், வள்ளரசு, முத்துக்குமார் உள்ளிட்டோரை ஜவுளி நிறுவன நிர்வாகிகள் ஆறு பேர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. ஒருநாள் இரவு, பகலாக அறையில் அடைத்து, நிர்வாணப்படுத்தி, கால்களைக் கட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பிய நால்வரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து பெருந்துறை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் ஜவுளி நிறுவனத்தைச் சேர்ந்த வேல்முருகன், பிரசாந்த், செந்தில், நந்தா, தமிழ் மற்றும் சதீஷ் ஆகிய ஆறு பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அந்த ஆறு பேரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெருந்துறை பேருந்து நிலையம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.