மணல் குவாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதிக அளவில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் மாநில இணைச் செயலாளரும், திருச்சி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான வரகனேரி ஆர்.கோபாலகிருஷ்ணன், நாமக்கல் ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும் தமிழ்நாடு மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் மாநில துணைத் தலைவருமான வழக்கறிஞர் பி.கைலாசம் ஆகியோர் பேசுகையில், "6 சக்கர மணல் லாரிகளுக்கு 8 பக்கெட் மணல் 7,500 ரூபாய் விலையில் வழங்க வேண்டும். 10 சக்கர வாகனங்களுக்கு 13 பக்கெட் மணல் 14,000 ரூபாய்க்கு அரசு வழங்க வேண்டும். மேலும், அதிகப்படியான குவாரிகளை திறக்க வேண்டும். அவ்வாறு மணல் எங்கள் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டால் இன்னும் குறைவான விலையில் மக்களுக்கு மணல் விநியோகம் செய்ய முடியும். இதை உடனடியாக அரசும் மணல் குவாரி உரிமையாளர்களும் அமல்படுத்த வேண்டும். ஓவர்லோடு ஏற்றுவதை மணல் லாரி சம்மேளனமும், திருச்சி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் நிச்சயம் அனுமதிக்காது.
சேலம், கரூர், திருச்சியில் தரமில்லாத எம்-சாண்ட் தயாரித்து அதில் பவுடர் கலப்படம் செய்கிறார்கள். இவ்வாறு கலப்படம் செய்து விற்பனை செய்வதால் மவுலிவாக்கத்தில் ஏற்பட்டது போல் கட்டிடம் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது. ஆற்றில் அதிகப்படியான மணல் இருப்பதால் கர்நாடகாவை போல் தமிழகத்திலும் எம்-சாண்ட் குவாரிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த எம்-சாண்ட் குவாரிகளால் நிறைய மலைகள் காணாமல் போகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அதிகப்படியான பாறைகளை உடைப்பதால் தமிழகத்தில் பூகம்பம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று தெரிவித்தனர்.