தான் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பின் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஓபிஎஸ் உடன் இணைந்து நான் செயல்படுவது உங்களுக்கு தெரியும். அவருடைய அணியில் நான் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறேன். அதெல்லாம் உங்களுக்கு தெரியும். ரொம்ப வருடமாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்ப செய்தி என்னவென்றால் நம்மை மிரட்டுவது, ஓபிஎஸ்-ஐ பற்றி தப்பு தப்பாக போடுவது, மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருவது என இருந்தது. கடைசியா எங்கே வந்து முடிந்துள்ளது என்று பாருங்கள்” என தான் இறந்துவிட்டதாக வெளியான போஸ்டரை செய்தியாளர்களிடம் எடுத்துக் காண்பித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''புகழேந்தி இறந்துவிட்டார் என்று நியூஸ் போடுகிறார்கள். இதை யார் செய்தார்கள் என்று ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. ஆகவே டிஜிபி சாரிடம் டிஸ்கஸ் பண்ணி புகார் கொடுத்திருக்கிறேன். எந்த முகநூல் கணக்கில் இருந்து இது வந்தது என்பதை எடுத்து கொடுத்திருக்கிறோம். நாம் இறந்தால்தான் லைஃப் என்று நினைக்கிறார்களா? பழனிசாமி இதைப் போன்ற வேலைகளை எல்லாம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இறங்கிட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது. எடப்பாடி எனக்கு பழைய நண்பர். நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு அருகில் இருந்து 'ஓ' என்று அழுகிறார். நான் வீட்டுக்குள்ளே இருக்கிறேன். ஏன் அழுகிறார் என்று பார்த்தால் கடைசியில் அவர்தான் இதை என்னிடம் காண்பித்தார். ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.