நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
அதே சமயம் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இன்று (04.04.2024) முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. இந்த நாட்களின் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.