சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.