தமிழக அரசின் ஊரடங்கு விதிகளை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உடனடியாக கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் மீண்டும் எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் தடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களிடையே தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகர பகுதிகளில் பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது 16.4.2020ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மாநகர பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட கால நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இந்தக் கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும். மேலும், கடையின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து செயல்படவும், குளிர்சாதனங்களை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடைகள், வணிக தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹேண்ட் சானிடைஸர்கள் வைத்திருக்க வேண்டும்.
இவை தவிர பிற அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் முழு ஊரடங்கு நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.
மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க, மாநகராட்சி நிர்வாகம் 40 சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது.
விதிகளை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005- ன் கீழ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படுவதோடு, கடை, நிறுவனம் உடனடியாக பூட்டி 'சீல்' வைக்கப்படும்.
ஆகவே, சேலம் மாநகரப் பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் செயல்படவும், தமிழக அரசின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளபடி தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாநகராட்சியின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.