கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் தூத்துக்குடியில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடக் கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அமைச்சர் எ.வ. வேலுவும், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிக்கு அமைச்சர் பி. மூர்த்தியும், தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு அமைச்சர் கே.என். நேருவும், அதே சமயம் தூத்துக்குடியின் இதர பகுதிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20.12.2023) தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, நாளை 20.12.2023 (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இவ்விடுமுறை நாளை ஈடு செய்ய வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும். அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறையான வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு, உள்ளாட்சித் துறை, பால், குடிதண்ணீர், எரிபொருள் உணவகப் பணியாளர்கள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உள்ளூர் விடுமுறை பொருந்தாது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (20.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.