திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் உள்ளன. இதில் மொத்தம் 341 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வந்தவாசி ஒன்றியத்தில் இரண்டு இடங்கள், அனக்காவூர் ஒன்றியத்தில் 1 இடத்தில் அதிமுக போட்டியில்லாமல் வெற்றி பெற்றது. மீதியுள்ள 338 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 2 இடங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 336 உறுப்பினர்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் திமுக-146, காங்கிரஸ்-5, சி.பி.எம் -1, அதிமுக 96 + 3, பாமக-39, தேமுதிக-8, பாஜக-1, சுயேட்சைகள்-39 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஒருயிடத்துக்கான ரிசல்ட் அறிவிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் என கணக்கிடும்போது சுமார் 50 சதவிதத்துக்கு மேலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதனை நினைத்து பெரும் மகிழச்சியில் உள்ளனர் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர்.
அதேநேரத்தில் 18 ஒன்றியங்களில் சில ஒன்றியங்களில் திமுகவும், சில ஒன்றியங்களில் அதிமுக மெஜாரிட்டியாக வெற்றி பெற்றுள்ளனர். பல ஒன்றியங்களில் திமுக, அதிமுக கூட்டணிகள் சமபலத்துடன் வெற்றி பெற்றுள்ளன. அங்கு சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். தங்கள் பக்கம் மெஜாரிட்டியை கூட்டி சேர்மன் சீட் பிடிக்க ஆளும்கட்சி தன் அதிகார பலத்தை இப்போதே காட்ட துவங்கியுள்ளது, இதனால் திமுகவின் மாவட்ட பிரமுகர்கள் தங்கள் கட்சி கவுன்சிலர்களை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். சுயேட்சைகளை தாங்கள் இழுக்க முடியும்மா எனவும் எதிர்பார்க்கின்றனர் திமுகவினர்.