முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27- ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை (30.12.2019) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46, 639 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை (30.12.2019) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று (28.12.2019) மாலை 05.00 மணியுடன் நிறைவடைந்தது.
158 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2,544 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4,924 ஊராட்சி தலைவர் பதவி, 38, 916 வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளை (30.12.2019) வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதனிடையே முதற்கட்ட தேர்தல் நடந்த சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நாளை (30.12.2019) நடைபெறுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் நாளை மறு வாக்குப்பதிவு நடக்கிறது.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை 15- வது வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி சென்னகரம்பட்டி கிராமம் 8- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் 21- வது வார்டிலும், நாகை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் 20-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் நாளை (30.12.2019) மறு வாக்குப்பதிவு நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் செம்மங்குடி ஊராட்சியில் 8- வது மற்றும் 9- வது ஆகிய இரு வார்டுகளில் நாளை (30.12.2019) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளம் ஊராட்சியின் 1- வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்கு பெட்டிக்கு தீ வைப்பு, வாக்குச்சீட்டில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் நாளை (30.12.2019) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜனவரி 2- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.