புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் பூபதிகண்ணன். 45 வயதான இவர் கடந்த 28-ந் தேதி காலை திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் அவரது காருக்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக பூபதிகண்ணன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்த சவுந்தர்யா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் விசாரணையில், உயர் அதிகாரி என்பதால் அவர் சொன்ன வேலைகளை செய்வேன். அவர் நட்பாக பழகினார். தினமும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு அவர் காரில் வருவார். திருச்சி - புதுக்கோட்டைக்கு நடுவில் மாத்தூரில் இருந்து நான் அலவலகத்திற்கு வருவேன். அதனை தெரிந்துகொண்ட அவர் தினமும் காலையில் காரில் வரும்போது அலுவலகத்திற்கு அழைத்து வருவார். பின்னர் மாலையில் அலுவலகத்தில் இருந்து காரில் அழைத்துச் சென்று மாத்தூரில் இறக்கி விடுவார்.
நட்பாக பழகியதால் குடும்ப சூழ்நிலையை சொல்லி பல லட்ச ரூபாய் அவரிடம் பெற்றுள்ளேன். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பணிமுடிந்து ஊர் திரும்பும் வேளையில் தேவைப்படும்போது, மாத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு காரில் செல்வோம். அங்கு காரிலேயே இருவரும் உல்லாசம் அனுபவிப்போம். பின்னர் என்னை மாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டதும் வீடு திரும்பி விடுவேன்.
வழக்கம்போல அலுவலக பணிகள் முடிந்து கடந்த 27-ந் தேதி மாலை புதுக்கோட்டையில் பணிமுடிந்து காரில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அவர், உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றார். நானும் சம்மதித்தேன். அதன்படி, மாத்தூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு காரில் சென்றோம்.
அங்கு காரில் வைத்து உல்லாசம் அனுபவித்தோம். பின்னர் பூபதிகண்ணன் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி காரில் இருந்து இறங்கி சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அலறியபடி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிவந்தார். நானும் பயந்தில் அலறினேன்.
அப்போது அவரை பின்தொடர்ந்து கையில் கத்தியுடன் வந்த ஆசாமி, “வெளியில் சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன்” என மிரட்டினான். நான் பயத்தில் ஆடிப்போய் நின்றேன். பின்னர் கத்தியை என் கையில் கொடுத்து, நீயும் 2 குத்து கத்தியால் பூபதிகண்ணனை குத்து என்று மிரட்டினான். வேறுவழியின்றி நானும் கத்தியால் அவரை குத்தினேன்.
அதன்பின்னர் கத்தியை கையில் வாங்கிய மர்ம ஆசாமி மீண்டும் அவரை கத்தியால் குத்தினான். பூபதி கண்ணன் கார் அருகிலேயே சரிந்து விழுந்து விட்டார். நான், அவர் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். கொலைகார ஆசாமி யார் என்றே எனக்கு தெரியாது.
பூபதிகண்ணனிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதை பலமுறை அவர் என்னிடம் திரும்ப கேட்டார். ஆனால், நான் செலவாகி விட்டது என்று கொடுக்காமல் காலம் கடத்தினேன். அதனால், எங்கள் இருவருக்கும் சிலவேளைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அவரை கொலை செய்யும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூபதி கண்ணனுடன் உள்ள கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்ட சவுந்தர்யா, கொலைக்கான காரணம் தெரியாது என்று மறுத்துள்ளார். இதனால், கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாமா? என்றும், கூலிப்படையை ஏவி விரோதம் காரணமாக பூபதிகண்ணனை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? என்றும் தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட சவுந்தர்யா கீரனூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பாரதிராஜன் முன்னிலையில் சவுந்தர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சவுந்தர்யா நேற்று திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பூபதிகண்ணனின் மனைவி அனுராதா, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கொலை தொடர்பாக அனுராதாவிடம் விசாரணை நடத்தப்படுவதுடன், சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்ற தகவல்களை திரட்டவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.