குடிக்கிற தண்ணியை கூட உறிஞ்சி எடுத்து சாராயம் தயாரிக்கிறாங்க. அதை கேட்கப்போனால் போலீசை விட்டு அடிக்கிறாங்கனு கிராம மக்களின் குமுறலைக் கேட்டு சும்மா இருந்தா நாங்க மனுசங்களே இல்ல அதான் சாராய ஆலையை மூடு சாராயக்கடைகளை பூட்டுன்னு சாராய ஆலையை முற்றுகையிட வந்தோம் என்றார்கள் கல்லாக்கோட்டை கால்ஸ் ஆலையை முற்றுகையிட்டு கைதான பெண் தோழர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ளது கல்லாக்கோட்டை கிராமம் முழுக்க முழுக்க விவசாய கிராமம். அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விவசாயமே பிரதானம். இந்த விவசாயமே பல குடும்பங்களில் பட்டதாரிகளை உருவாக்கியது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்க்கையையும் அழிக்க வந்தது கால்ஸ் என்னும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை.
முதலில் ஆலை பற்றி தெரியாத மக்கள் அங்கு வேலைக்குச் சென்றார்கள் சில மாதங்களிலேயே சாராய உற்பத்திக்காக தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்ததால் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் கானல் நீரானது. தண்ணீர் குறைந்ததால் விவசாயம் குறைந்தது. இதைப் பார்த்து கிராம மக்கள் விவசாயம் காக்க போராட்டம் நடத்தினார்கள் போலீசாரை வைத்து போராட்டத்தை முடக்கி சுமார் 150 பேர்கள் மீது வழக்கு போட்டனர். அதனால் உள்ளூர் மக்கள் வேலைக்கு போவதை நிறுத்திக் கொண்டாலும் நீதிமன்றம் போவதை நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது போல குடிதண்ணீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டது.
இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் கல்லாக்கோட்டை சுற்றியுள்ள பல கிராம மக்கள் ஊரையே காலி செய்யும் அவல நிலை ஏற்படும். இடதுசாரிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பல முறை போராடிவிட்டார்கள் ஆனால் பலனில்லை. இந்த நிலையில் தான் தமிழர் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்திடம் பெண்கள் கண்ணீர் வடித்தனர்.
14ந் தேதி கல்லாக்கோட்டை சாராய ஆலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்ததுடன் காலை 10 மணி முதல் பெண்கள் அதிகமானோர் திரண்டதால் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்ததுடன் ஆலை முன்பும் தடுப்புகளை வைத்து தடுத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது, ஊரெங்கும் சாராயக்கடைகளை நடத்தி பல ஆயிரம் பெண்களை விதவை ஆக்கிவிட்ட பிறகும்கூட இப்ப குடிக்கிற தண்ணீயை உறிஞ்சி எடுத்து சாராயம் தயாரித்துக் கொண்டு கழிவுகளை வெளியேற்றி கிராம மக்களுக்கு நோய்களை பரப்புகிறார்கள். இதை எல்லாம் கிராம பெண்கள் சொல்கிறார்கள். இதை கேட்ட பிறகும் நாங்க போராட வரலன்னா நாங்கள் மனிதர்களே இல்லை. இன்று போலீசாரை வைத்து தடுக்கலாம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கலன்னா மறுபடியும் வருவோம் ஆலை மூடும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.