திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், விதிகளை மீறி ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதனை உயர் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ குற்றம்சாட்டியிருந்தார்.
இதுப்பற்றி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து முறையிட்டார். திமுக பிரச்சார கூட்டங்களில், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம், அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என வெளிப்படையாக கூறுகிறேன். அதனால் அதிகாரிகள் உங்கள் பணியை நேர்மையாக செய்யுங்கள் என எச்சரிக்கை கலந்த வேண்டுக்கோள் விடுத்துவருகிறார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாவரம் ஊராட்சியின் செயலராக பணியாற்றியவர் ஆனந்தன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஊராட்சியில் மக்கள் பிரதிநிதியாக தலைவர் இல்லாததால் அரசு உழியர்கள் நிர்வாகம் செய்து வந்தனர். அதனை பயன்படுத்திக்கொண்டு பணிகள் செய்ததாக போலியாக பில் தயார் செய்து லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் செய்துள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்கள் சிலரின் உதவியுடன் மீண்டும் சஸ்பென்ட் உத்தரவை நீக்கவைத்து, திண்டிவனம் என்கிற ஊராட்சியில் பணி மாற்றம் செய்துள்ளனர் அதிகாரிகள். அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், தனது ஊரான கிருஷ்ணாவரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தனது தாய் மாரியம்மாள், 12வது வார்டுக்கு உறுப்பினராக போட்டியிடவைத்துள்ளார். போட்டியிட வைத்ததோடு, தானே தனது தாய்க்கு ஆதரவாக கிருஷ்ணாவரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த திமுகவினர். போளுர் தொகுதி எம்.எல்.ஏ சேகரனிடம் வழங்கினர்.
இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் இரண்டு நாட்களாக பரவியும், எந்த அரசு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுப்பற்றி திமுகவினர் போளுர் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை. தேர்தல் பார்வையாளர்க்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் டிசம்பர் 24ந்தேதி காலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரில் வலியுறுத்தினார் எம்.எல்.ஏ சேகரன். அதன்பின், ஆனந்தனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.
அரசு ஊழியர் என்பவர் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பணியாற்ற கூடாது என்கிற விதிமுறை உள்ளது. அதனை அப்பட்டமாக மீறிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ நேரில் கலெக்டரை சந்தித்து அழுத்தமாக புகார் கூறியபின்பே நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் எந்தளவுக்கு மாவட்ட நிர்வாகம் ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளது என தெரிந்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் எதிர்கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும்.