வால்பாறையில் சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை, வால்பாறை வட்டம், ஊசிமலை பகுதியில் உள்ள நடுமட்டம் என்ற கிராமத்தில் நேற்று நான்கு வயது சிறுமி ஒருவரை சிறுத்தை ஒன்று தாக்கியது. இதில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலானது வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நான்கு வயது சிறுமியின் உயிரிழப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது
இன்று பெற்றோர்களிடம் சிறுமியின் உடல் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சிறுமியைத் தாக்கிய சிறுத்தையைப் பிடிக்க அந்தபகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அந்த பகுதியில் ஆறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 12 பேர் கொன்ற குழுவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கேமராவில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக கூண்டுவைத்து சிறுத்தை பிடிக்க அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.