தமிழ்நாட்டில் நீதிமன்றங்களின் தலையீட்டால் அவசரகதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, மற்றும் 30 ந் தேதி நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அவசரகதியால் மாதிரி வாக்குச்சாவடிகள் நடத்தப்படாமல் தேர்தல் பணிகள் நடக்கிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முறையான பயிற்சியும் இல்லை அவர்களுக்காண தபால் வாக்குகளும் வழங்கப்படவில்லை. கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள், புற்று நோய் பாதிப்பு உள்ளவர்களுக்காண விலக்கு என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளையும் மதிக்கவில்லை. இப்படி எல்லாமே அவசரமாக நடத்தப்படுவதால் தேர்தல் முறையாக நடக்குமா என்ற கேள்வி எதிர்கட்சிகளுக்கு மட்டுமின்றி வாக்காளர்களிடமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் 27 ந் தேதி தேர்தல் நடக்க உள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் அதிகாரிகள் அலுவலர்கள் எந்த ஊருக்கு பணி என்பதை நாளை 26 ந் தேதி காலை 10 மணிக்கே வெளியிட்டு பணி ஆணை வழங்கப்பட வேண்டும். அதுவரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முன்னதாக தெரிந்தால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், கந்தர்வகோட்டை, குண்றாண்டார்கோயில், கறம்பக்குடி உள்ளிட்ட பல ஒன்றியங்களில் 27 ந் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த ஒன்றியங்களுக்கு தேர்தல் நடக்காத ஒன்றியங்களில் உள்ள அலுவலர்கள் பணிக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு நாளை காலை 10 மணிக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் பணியிடம் பற்றிய ஆணை பெற்றுச் செல்ல அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள விராலிமலை மற்றும் அன்னவாசல் ஒன்றியங்களில் உள்ள வாக்குச் சாவடிகளின் பணியாற்ற உள்ள அதிகாரிகள், அலுவலர்களின் பட்டியல் 25 ந் தேதி மாலையே வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களுக்கு வெளியிடவில்லை.
இப்படி அவசரமாக அமைச்சர் தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் பட்டியலை வெளியிட்டதன் மர்மம் ஏன்? ஏதேனும் முறைகேடுகளுக்கு இந்த வெளியீடு வழிவகுக்குமா என்ற கேள்வி எதிர்கட்சிகளிடமும் வாக்காளர்களிடமும் எழுந்துள்ளது. மேலும் மாற்றுப்பணிக்கு வர உள்ள அலுவலர்களும் இந்தப் பட்டியலைப் பார்த்த பிறகு வராமலும் போக வாய்ப்புகள் உள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அவசரம் ஏனோ?