கரோனாவின் கொடிய காலம் தொடர்ந்து கொண்டே வந்தாலும் இனிமேலும் பொறுப்பதற்கில்லை என்று சில மாநில அரசுகள் மூடப்பட்ட மதுக் கடைகளை இன்று காலை முதல் திறந்து விட்டது. ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேல் எப்போது திறப்பார்கள்....? என ஏங்கிய குடிமகன்கள் ஏராளம்.... ஏராளம்... அவர்களின் ஏக்கத்தைப் போக்கியது நமது அருகாமையில் உள்ள ஆந்திரா மாநிலம். அங்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது.
குறிப்பாக நகரியில் உள்ள ஒரு மதுக்கடை திறக்கும்போது குடிமகன்கள் தேங்காய் உடைத்து ஆரவாரத்தோடு கொண்டாடினார்கள். அதேபோல் பல மாநிலங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகளில் குடிமகன்களின் கூட்டம் பல கிலோமீட்டர் அளவு நீண்டது.
டெல்லியில் குவிந்த கூட்டத்தால் போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் சில மதுக்கடைகளை மூடி விட்டனர். ஆனால் ஜார்கண்ட், கர்நாடகா போன்ற மாநிலங்களில் குடிமகன்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு மதுபாட்டில்கள் முறையாக கிடைக்கும் வழிவகைகளை போலீசார் செய்தனர்.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பொதுவாக பெண்கள் மதுக் கடைக்குச் சென்று மது வாங்குவது என்பது அரிதினும் அரிதுதான். ஆனால் நீண்ட நாளாக கடைகள் பூட்டப்பட்டதால், இன்று ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரதான நகரமான நகரியில் எந்தவிதமான சஞ்சலமும் இல்லாமல் பெண்கள் மதுக்கடைகளில் திரண்டு விட்டனர். அவர்கள் கடையை பூட்ட வேண்டும் என கூறி வரவில்லை. மாறாக மது வாங்க வந்த பெண்கள் கூட்டம்தான்.
இதனால் வேறு வழியில்லாமல் அந்த கடையில் இரண்டு வரிசைகள் அமைக்கப்பட்டது. ஒரு வரிசையில் ஆண்களும் மற்றொரு வரிசையில் பெண்களும் வரிசையாக வந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர். அப்படி மது வகைகளை வாங்கிச் சென்ற பெண்களை பார்த்தால் வயதானவர்கள் அல்ல. இளம் பருவத்து பெண்கள்தான் அவர்கள். குடிமகன்கள் ஒரு புறம் என்றால் குடிமகள்களும் நம் நாட்டில் மறுபுறம் இந்த 'குடி'யில் அசத்துகிறார்கள்.