மதுபானம் மற்றும் பீடி கேட்டதால் மாற்றுத்திறனாளி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தீர்த்தகுளம் பகுதியில் முருகன் கோவில் எதிரில் கோழி கறிக்கடை நடத்தி வருபவர் கண்ணன் மகன் செங்கூட்டுவன் (45). மாற்றுதிறனாளியான இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது கடையில் இருந்துள்ளார். தீர்த்தகுளம் மேளக்காரர் வீதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் (25). இவர் சென்னையில் கறி வெட்டும் பணி செய்து வருகிறார். இவர் செங்கூட்டுவன் நடத்தி வரும் கடை வழியே சென்றுள்ளார்.
அப்போது சதீஷிடம், செங்குட்டுவன் மது மற்றும் பீடி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், செங்குட்டுவனை கீழே தள்ளி் மர பென்சை (Bench) கழுத்தில் போட்டு அதன் மேல் நின்றும், அங்கிருந்த பீங்கான் பொம்மையை எடுத்து முகத்தில் அடித்ததாகவும், இதில் செங்குட்டுவன் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. செங்கூட்டுவனை மீட்டு திண்டிவனம் அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடலை கைப்பற்றிய திண்டிவனம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளியான செங்குட்டுவனை கொலை செய்த சதீஷ் என்பவரை கைது செய்து திண்டிவனம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மதுவிற்காக மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.