கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29-06-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவிற்கு ஆளுநரால் 11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இச்சட்டத்தின் கீழ் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.