இந்தியாவில் கரோனா 2ம் அலையின் தீவிரம் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணிகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கக் கட்டாயம் முதல் டோஸ் கரோனை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் அட்டையை கண்டிப்பாக மதுவாங்குபவர் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.