கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை அடுத்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக, போதைப்பொருள் தடுப்பு வேட்டையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே கைது சம்பவங்களும், போதைப் பொருட்கள் பறிமுதல்களும் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது குறைந்தபாடில்லை. அரசு மதுபாட்டிலைவிட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், கிராமப் புறங்களில் இருக்கும் குடிமகன்கள் இரு சக்கர வாகனங்கள் மூலம் கள்ளச் சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுகின்றனர். கள்ளச்சாராயம் மிகவும் குறைந்த விலை என்பதால் ஏராளமான இளைஞர்களும் சாராயம் குடிக்கத் தொடங்கினர். இதனால் திறந்தவெளி பகுதியில் பட்டப்பகல் நேரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதும் அந்த சாராயத்தை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
ஆனால், கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் சாராய விற்பனைகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. இதை தடுத்தாலும் மறுபுறம் அரசு டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் நடக்கும் இந்த மதுபான விற்பனை சுற்றுவட்டார பகுதிகளில் படுஜோராக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை தவிர அந்த பகுதியில் வேறு எந்த கடைகளும் இல்லாததால் அங்கு ஏராளமான சந்துக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தகவலை தெரிந்துகொண்ட மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஒரு சில சந்துக்கடைகளில் உள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து பெயர் அளவிற்கு கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கூலிப்பாளையம் நால்ரோடு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிகாலை நேரத்திலும் நள்ளிரவு நேரத்திலும் மதுபாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், இதனை கண்டும் காணாதபடி இருக்கும் உள்ளூர் காக்கிகள்.. விற்பனையாளர்களிடம் அதிகளவில் பணம் வாங்குகின்றனர். இதனிடையே, நால்ரோடு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்படும் மது வகைகளால்.. கள்ளச்சாரயத்தை போன்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, விதிகளை மீறி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.