“ஏய்... யார் மேல கை வைக்கிற, உன்ன மாதிரி எத்தனை ஆஃபிசர பாத்துருக்கேன்” என்று காவல் உதவி ஆணையரை மிரட்டிய ஆயுள் கைதியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மாநகராட்சி துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மகன் சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குட்டியப்பன் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட, ஒரு கட்டத்தில் சூர்யா குட்டியப்பனைக் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த குட்டியப்பனை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து குட்டியப்பனின் சகோதரர்கள் டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து சூர்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் சூர்யா அப்போது வீட்டில் இல்லாததால் அவரது தந்தை விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் பெரும் தகராறாக மாறிய நிலையில், குட்டியப்பனின் சகோதரர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 8 பேரும் சேர்ந்து விஜயகுமாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இது குறித்த வழக்கு சேலம் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டெனிபா(35), சிலம்பரசன்(31), திருநாவுக்கரசு(30), மார்ட்டின்(35), ஜீசஸ் (27), ஜெயக்குமார்(25), விக்னேஷ்(24), சிவா (24) உள்ளிட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்திலிருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொருவராக வேனில் போலீசார் ஏற்றினர். அப்போது ஒரு குற்றவாளி கையை பிடித்துக் காவல் உதவி ஆணையர் ராமமூர்த்தி வேனில் ஏறுமாறு கூறியுள்ளார். இதனால் கோவமடைந்த அந்த குற்றவாளி “ஏய்... யார் மேல கை வைக்கிற, உன்ன மாதிரி எத்தன அதிகாரியை நா பார்த்து இருப்பேன்...உன்னால என்ன பண்ண முடியும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்த மற்றொரு குற்றவாளி அவரை சமாதானப்படுத்தி வேனில் ஏற வைத்து மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றார். போலீசார் முன்னிலையில் காவல் உதவி ஆணையரைக் குற்றவாளி ஒருவர் எச்சரித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.