திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார், வயது 32. இவருடைய மனைவி மஞ்சுளா, வயது 27. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.
இருவரும் 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பிறகு மஞ்சுளாவை அவரது தாய் வீட்டில் தங்க வைத்துவிட்டு, ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு முறை கர்ப்பமான மஞ்சுளாவுக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்து கருவைக் கலைக்கச் செய்துள்ளார் ராஜேஷ்குமார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு மஞ்சுளாவுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை ராஜேஷ்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மஞ்சுளா, கணவர் ராஜேஷ் குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினையின்போது மஞ்சுளாவை அவரது கணவர் ராஜேஷ் குமார் ஜாதி பெயரைக் கூறி திட்டி தாக்கியதாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் மஞ்சுளா.
இதையடுத்து மகளிர் போலீசார், மஞ்சுளா கொடுத்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், மஞ்சுளாவின் கணவர் ராஜேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (31.01.2021) தீர்ப்பளித்துள்ளார். ராஜேஷ்குமார், மஞ்சுளாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளார். மனைவியை அடித்து துன்புறுத்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.