மனிதரின் வாழ்க்கையை கொடூரமாக்கிய கரோனா தொற்றின் விளைவாய், தற்போது தொற்றுப் பரவல் வீரியமெடுத்த நிலையில், 5ம் கட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்களுக்கான பொது பேருந்து போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலத்தை 8 மண்டலமாக பிரித்ததில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி 4 மாவட்டங்களை ஒரு மண்டலமாக்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்குள் பயணிப்பவர்களுக்கு இ-வே-பாஸ் தேவையில்லை. மண்டலம் விட்டு வேறு மண்டலம் பயணிப்பு என்றால் இ-வே-பாஸ் அவசியம்.
பேருந்தில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். பேருந்துகளில் மூவர் சீட்டில் இருவருக்கும், இருவர் சீட்டில் ஒருவருக்கும் மட்டுமே அமர அனுமதி. மொத்தத்தில் ஒரு பேருந்தில் 30-36 பேருக்கு மேல் அனுமதி இல்லை. மேலும் மண்டலத்தில் 50 சதவிகித பேருந்துகளே இயக்கப்படும் என்கிறது அறிவிப்பு. 5ம் கட்டமான ஜூன் முதல் தேதியன்று காலை முதல் பொதுப் போக்குவரத்து நெல்லை மண்டலத்தில் துவக்கப்பட்டாலும், பேருந்தில் பயணம் செய்கிற பயணிகளின் கூட்டமில்லை.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் கிராம புறங்களுக்கு காலை நேரத்தில், பிற சமயங்களில் இயங்கிய பேருந்துகள் போதிய பயணிகளின்றி எம்.டி.ட்ரிப்புகள் அடிக்கப்படுகின்றன. கிராமங்களின் நிலை இப்படி எனில், நகரங்களிலும் அதே பிரச்சனைதான் நெல்லை, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களிலும் பேருந்துகள் போதிய பயணிகளின்றி சொற்ப அளவிலான பயணிகளுடனேயே கிளம்புகின்றன. இரண்டு மாதத்திற்கும் மேல் வேலையில்லாமல் வருமானமின்றி வாழ்க்கையே கந்தலாகிப் போய்விட்டது. பஸ் ஏற கையில் பணமில்லை. வெளியூர்களில் சிறு சிறு தொழில்கள் முடக்கத்தால் வேலையுமில்லாத நிலையில் பேருந்தில் ஏற எங்கே வழியிருக்கிறது என்கிற மனநிலை கிராமப் புறங்களில் நிலவுகிறது.
தொலை தூரப் பேருந்துகள் கிடையாது. தென் மாவட்டங்களிலிருக்கும் வியாபார நிறுவனங்களுக்கான கொள்முதல் சென்டர் மதுரை மற்றும் திருச்சியான வடமாவட்டங்களே. சிறிய வியாபாரிகள் தொட்டு பெரிய வியாபாரிகள் வரை அங்கே வியாபார நிமித்தம் சென்று வந்தால்தான் வியாபாரம் நடக்கும். மதுரை மற்றும் பிற பகுதி செல்ல வேண்டுமானால் இ-வே-பாஸ் வேண்டுமாம். பிறகு எப்படி வியாபாரம் ஓடும். இந்த மண்டலத்திற்குள்ளேயே பயணிப்பதால், குறிப்பாகப் பணப் புழக்கம் கொண்ட வியாபாரம் சாத்தியமில்லை. அதே சமயம் நாகர்கோவிலிலிருந்து திருச்சி வரையில் இரயில் இயக்கப்படுகிறது. மண்டலம்விட்டு மண்டலம் செல்கிற ரயில் போக்குவரத்து வசதியை போன்று பேருந்து வசதியுமிருந்தாலேயொழிய முடங்கிப் போன வியாபாரம் மெல்ல மெல்ல எழுந்திருக்கும் என்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார பிரிவை சேர்ந்தவர்கள்.