திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நூலகம் உருவாக்கும் செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது திமுக அரசு. இது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தனது பதிவைப் பதிவு செய்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி. அதில், "தி.மு.கழகத்தை தன் எழுத்தாலும், பேச்சாலும் அறிவியக்கமாக உருவாக்கிய கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திமுகவின் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பொறுப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். அந்த வகையில், திமுகவின் இளைஞரணிக்கு, 'தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டிலேயே முதல் தொகுதியாக, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று திறந்து வைத்தோம். கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்த நூலகத் திறப்பு விழாவில், அமைச்சர் சக்கரபாணி உடனிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற வகையில், நூலகத்தை உருவாக்கும் பணியை அமைச்சர் சக்கரபாணி முழுமையாகக் கவனித்துக் கொண்டார் .