புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 15ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து நெடுவாசல் சுற்றுவட்டார 100கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
அதன் விளைவாக மத்திய மாநில அமைச்சர்கள் நெடுவாசலுக்கு நேரில் சென்று திட்டம் வராது என்று உறுதி அளித்தனர். அதனால் 22 நாட்கள் நடந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால் மார்ச் 27ந் தேதி மத்திய அரசு நெடுவாசல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஜெம் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் நெடுவாசலில் மீண்டும் இரண்டாம் கட்ட போரட்டம் ஏப்ரல் 12ந் தேதி தொடங்கி 174 நாட்கள் நடந்தது.
இதன் விளைவாக தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் எந்த சூழ்நிலையிலும் ஜெம் நிறுவனம் நெடுவாசலுக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக் குழுவினர் கூறிவந்தனர். மேலும் பல அடையாளப் போராட்டங்களும் நடந்து வந்தது.
இந்த நிலையில் வியாபார லாப நோக்கத்தில் தான் நெடுவாசல் திட்டத்தை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் மத்திய மாநில அரசுகள் குறப்பிட்ட நிலத்தை எங்களுக்கு குத்தகை மாற்றித் தரவில்லை என்பதால் இழப்பு ஏற்படுகிறது. அதனால் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய மாநில அரசுகள் பதில் தரவில்லை. அதனால் நெடுவாசலுக்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக ஜெம் நிறவனம் கூறியுள்ளது.
இந்த தகவல் வெளியானதும் நெடுவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட எங்கேயும் செயல்படுத்தக் கூடாது. அப்படி செயல்படுத்த முயன்றால் நெடுவாசல் போரட்டக்குழு தொடர்ந்து போராடும் என்றனர்.
Published on 10/05/2018 | Edited on 10/05/2018