மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி அரங்குக்கு வெளியே தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வைத்திருந்த போர்டில் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அதில் –
மதுவை நிறுத்து! மரணத்தை விரட்டு!
மது உயிரை அழிக்கும்! மதி உயிரைக் காக்கும்!
போதையில் தள்ளாட்டம்! வாழ்க்கையில் திண்டாட்டம்!
அழகான வீடும் அடி சாய்ந்து போகும் ஆகாத குடி போதையில்!
மானத்தோடு வாழ மதுவை மறப்போம்!
மதுபானங்கள் என்ற பெயரில் நச்சுத்திரவங்களை அருந்திவிட்டு உயிர்விடுவதால் யாருக்கு என்ன லாபம்?
மனைவி மக்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு செல்லவா மதுபானம்?
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருள்களை பயன்படுத்தாதீர்!
மதுவால் மாண்டவர் பலர்.. உறவுகளை இழந்தவர் பலர்.. எனவே மதுபானத்தை வெறுப்போம்! அறவே
ஒழிப்போம்!
வீரமிகு இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாவதா?
இளைஞர்களே மது அருந்த செல்கிறீர்களா? மரணத்தை அழைக்க செல்கிறீர்களா?
மதுவினால் உயர்ந்தவர் எவருமில்லை.. வீழ்ந்தோர் பலர்.. நினைவில் கொள்வோம்!
மது அருந்துவதும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதும் உயிர் சேதத்தை உருவாக்கும்.
மதுவை மறப்போம்! மனிதனாக இருப்போம்!
என எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதே மதுரையில், தெற்கு வெளி வீதியில் இரவு மணி 10-ஐ கடந்த நிலையில் , டாஸ்மாக் கடையை அடைத்துக்கொண்டிருந்த வேளையில், மது வாங்க கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. புத்தக கண்காட்சி அரங்குக்கு வெளியே வைத்திருந்த மதுவிலக்கு துறையின் எச்சரிக்கை போர்டை, ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் வைத்திருக்கலாமே எனத் தோன்றியது.