தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (25.8.2023) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.08.2023) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என். நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் (எக்ஸ் தளத்தில்) பதிவில், “டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். விளைச்சலை அதிகரிப்பதோடு, உழவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை மாவட்ட அதிகாரிகள் ஏற்படுத்தித் தருவதும் முக்கியம். அதிகாரிகளும், அமைச்சர்களும்; மாவட்ட அலுவலகங்களும், தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சிக்கான இலக்கணம் படைப்போம்” என தெரிவித்துள்ளார்.