இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ பரவட்டும் நாடெங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம். எண்ணித்துணிவோம், இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ பரவட்டும் நாடெங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.