"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்பவும் இல்ல. தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.
இந்நிலையில், ரஜினியின் இந்த நிலைப்பாட்டுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., ''சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமையும்'' எனக் கூறியிருந்தார். நேற்றே இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டபோது, அதுகுறித்து முழுத் தகவல் தெரியாது. எனவே முழுவதுமாகத் தெரிந்துகொண்டு என் கருத்தைச் சொல்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று சிவகங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வரிடம், மீண்டும் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, "ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். கட்சித் தொடங்கப் போவதாகத்தான் ரஜினி சொல்லியிருகிறார். எனவே, கட்சித் தொடங்கட்டும். பிறகு, என் கருத்தைச் சொல்கிறேன். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி எனத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியது அவருடைய கருத்து" என்றார்.