ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்களிடம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், தொழுநோயால் இன்னலுக்கு ஆளாவோர் மத்தியில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதுமே இந்நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் விழிப்புணர்வு பேரணிகள், வீதி நாடகங்கள் மற்றும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. "இந்த வருடம் தொழு நோயை வென்று சரித்திரமாக்குவோம்" என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மருத்துவ மாணவர்கள் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், தொழுநோய் சாபத்தால் பாவத்தால் தீய செயல்களால் வருவது அல்ல; தொழு நோய் பரம்பரை வியாதி அல்ல; தொழு நோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது என்ற விழிப்புணர்வு வாசகங்களைத் தாங்கி பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இந்த விழிப்புணர்வு பேரணியை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட பேரணியானது திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியில் நர்சிங் மாணவிகள், மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அங்குள்ள கூட்ட அரங்கில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் நர்சிங் பயிலும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.