சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து வந்த அந்த கடையின் உரிமையாளர் 'லெஜெண்ட்' சரவணன், சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். அவரது தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஜோடியாக வட இந்திய மாடல் அழகி ரித்திகா திவாரி நடிக்கிறார். பிரபல சீனியர் நடிகர்-நடிகைகளான விஜயகுமார், பிரபு, லதா, சச்சு உள்ளிட்ட பலரும் இதில் இணைகிறார்கள்.
ஆரம்பக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இடையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், மீண்டும் படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டன.
நிறுத்தி வைக்கப்பட்ட லெஜெண்ட் சரவணாவின் சினிமா படப்பிடிப்பு, வருகிற ஆகஸ்ட் 16- ந்தேதி திங்கட்கிழமை தொடங்கி அடுத்து வரும் மூன்று நாட்கள் கும்பகோணம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் சூட்டிங் நடக்கிறது. குறிப்பாக, திருவிழிமிழலை, திருவிடைமருதூர், உடையார்பாளையம், திருவாடுதுறை ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் சூட்டிங் நடத்தப்படவிருக்கிறது.
இந்த கோவில்களில் திருவிழா நடப்பது போலவும், ஹீரோவுக்கு பரிவட்டம் கட்டுவது போலவும், சாமி பிரகாரத்தை ஹீரோ சுற்றி வருவது போலவுமான காட்சிகள் ஷூட் பண்ணப்படவிருக்கிறது. இதற்காக, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது குறித்து, அப்பகுதி மக்கள் சர்ச்சையைக் கிளப்புவதுடன், மாவட்ட ஆட்சியருக்கு புகாரும் அனுப்பியுள்ளனர்.
கரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கோவில்களில் கூட்டம் கூடுவது, சிறப்புப் பூஜைகள் நடத்துவது, சிறப்பு தரிசனம் செய்வது போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள்.
இந்த நிலையில், கோவில்களில் சினிமா சூட்டிங் நடத்தினால் கூட்டம் அதிகரிக்கும். குறிப்பாக, சூட்டிங் நடக்கும் பகுதிகளில் உள்ள மக்களும், சூட்டிங்கை கேள்விப்பட்டு அருகாமையில் உள்ள கிராம மக்களும் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வருவது அதிகரிக்கும். இதனால் தேவையற்ற கூட்டம் கூடுவது கரோனா பரவலுக்கு காரணமாக அமையும்.
சாமானியர்கள் சாமி கும்பிட கோவில்களில் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா சூட்டிங்கை மட்டும் கோவில்களில் நடத்த யார் அனுமதி கொடுத்தது? சினிமாகாரர்களுக்கென்றால் சட்டம் தன் கடமையைச் செய்யாதா? அனுமதி கேட்டதும் கொடுத்து விடுவதா? சினிமா மோகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து இந்த அனுமதி தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது சினிமாக்காரர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளுக்கு மயங்கி அனுமதி தரப்பட்டிருக்க வேண்டும்.
கரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், எந்த வகையில் அனுமதி கொடுத்திருந்தாலும் தவறு. கோவில்களில் சாமானியர்களுக்கு ஒரு நீதி? சினிமாக்காரர்களுக்கு ஒரு நீதியா? என்று குமுறுகிறார்கள் அப்பகுதி மக்கள். இதுவே புகாராகவும் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.