தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விவசாய நிலங்களில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அரசூரிலிருந்து விளாங்குடி சாலை வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கண்டியூர், கல்யாணபுரம், கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட பல கிராமங்களில் பச்சை பசேலென நெற்பயிருடன் காணப்படும் வயல்வெளிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணியானது நடைபெற்றுள்ளது.
தற்பொழுது காட்டுக்கோட்டை பாதை கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் வளர்ந்து நிற்கும் நெற்பயிர்கள் மீது மண்ணைக் கொட்டி சாலை அமைப்பதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பயிர் மேலேயே மண்ணைக் கொட்டி புறவழிச்சாலை அமைக்கிறார்கள். இதைத் தடுத்துக் கேட்டால் எல்லாவற்றுக்கும் செட்டில்மெண்ட் பண்ணியாச்சு என்கிறார்கள். இதுவரைக்கும் யாருக்கும் ஒரு நயா பைசா பணம் கூட கொடுக்கக் கிடையாது. முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. பொன்னு விளையிற பூமி... இத விட்டுவிட்டு நாங்க என்ன செய்வோம். எந்த ஆதரவில் நாங்கள் வாழ்வது.ரொம்ப தண்ணீர் தேங்கும் இடம் இது. பக்கத்தில் உள்ள வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் நாளை இந்த இடம் எல்லாம் நீரில் மூழ்கி விடும்' என்று வேதனை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டமானது வைரலாகி வருகிறது.