சிறைக் கைதிகளைச் சந்திக்க வரும் அவரது உறவினர்கள், அவர்களிடம் பேசுவதைப் போல ஒரு கொடுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒரே நேரத்தில் பல கைதிகள் தங்களின் உறவினர்களிடம் பேசுவார்கள். அந்த சத்தத்தில் ஒருவர் பேசுவது மற்றொருவருக்குக் கேட்பதே மிகக் கடினமாக இருக்கும். ஆனாலும், அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு சத்தமாகப் பேசுவார்கள். அதுமட்டுமல்லாமல் கைதிகள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய உளவுத்துறையும் படாதபாடு படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மத்தியச் சிறையில் தற்போது 2000-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும் விசாரணைக் கைதிகளும் இருக்கின்றனர். கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் மனு அடிப்படையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அந்த முறையை மாற்றுவதற்காக மதுரை மத்தியச் சிறையில் இண்டர்காம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சிறையில் இருக்கும் கைதிகளுக்கு எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினர்களிடம் பேசுவதற்காக இண்டர்காம் தொலைப்பேசி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகளைச் சந்திப்பதற்கு, வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களைப் போல், வழக்கறிஞர்களும் இன்டர்காம் தொலைப்பேசி மூலம் தான், கைதிகளுடன் பேச வேண்டும் எனக் கோவை சிறை ஜெயிலர் தெரிவித்துள்ளர். இதனால் விரக்தியடைந்த வழக்கறிஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் கிரிமினல் பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள், ஏடிடி காலனி அருகேயுள்ள பார்க்கேட் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர்.