இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்குப் பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று (10.07.2024) சிதம்பரம் ரயில் நிலையத்திற்குச் சென்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் சோழன் விரைவு ரயில் மறித்து மறியல் போராட்டம் செய்வதற்கு முயற்சித்தனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்காததால் அவர்கள் காவல்துறையின் தடையை மீறி நடைமேடை வரை சென்று சோழன் விரைவு ரயில் நடைமேடையில் நின்ற போது 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர்.