தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.
அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.
அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.