தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (19/08/2021) தலைமைச் செயலகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், தேசிய ஆதி திராவிடர் ஆணைய இயக்குநர், தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சாதியைக் காரணம் காட்டி வளர்ச்சித் தடுக்கப்படக் கூடாது; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சூ மந்திரகாளி என்பது போல நாளையே எல்லாம் நடக்கும் என நானும் நினைக்கவில்லை, நீங்களும் நினைக்கமாட்டீர்கள். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் கணக்கிட்டு நிரப்பப்படும். தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், ஆதி திராவிடர் நலக்குழுவைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமைச் சம்பவங்களை கேள்விப்படும் போது கோபம் வருகிறது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை ஏற்றத்தாழ்வு அப்படியேதான் இருக்கின்றன. சட்டத்தின் மூலம் இதை ஓரளவு சரி செய்ய முடியும். அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.