
‘பேய் இருக்கா? இல்லையா?’ என்ற கேள்விபோல, ‘மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?’ என்ற கேள்வியும், அவ்வப்போது அரசியல் ரீதியாக எழுப்பப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் – பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, மற்றவர்களைப்போல் அல்ல. ‘மதுரை எய்ம்ஸ்’ குறித்த 17 கேள்விகளை, தகவல் உரிமைச் சட்டத்தின் வாயிலாகவே கேட்டிருந்தார்.
‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும்? மாதிரி வரைபடம் கிடைக்குமா? கடன் உதவிகள் கிடைத்தனவா?’ என அவர் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம், பதில் அளித்துள்ளது.
அந்தத் தகவலில், ‘ரூ.1,264 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வழங்க முடியும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜிக்காவிடம் (JICA) கடன்பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. அதற்கான ஒப்பந்தமும் முடிவுக்கு வரவில்லை. ஜிகாவால் கடன் அனுமதிக்கப்பட்ட பிறகே, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு, மாநில அரசானது, நிலத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் அளித்துள்ள மேற்கண்ட பதிலால், ‘எப்போது கடன் பெறுவதற்கான அனுமதி கிடைக்கும்? கட்டுமானப் பணிகள் எப்போதுதான் முடியும்?’ என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்நிலையில், மதுரை மாவட்டம் – திருமங்கலத்தில், லயன்ஸ் கிளப் சங்கங்களோடு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ‘கரோனா அரக்கன் வந்ததால்தான் ஒப்பந்தம் போடமுடியவில்லை. அதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று ஏன் சொல்லவேண்டும்? வந்துவிடும் என்று நம்புவோம்.’ எனப் பேசியிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளிப்படுத்திய நம்பிக்கையும் பொறுமலும் இதோ, “திருமங்கலத்தில் உள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் மக்களை கரோனா காலத்தில் சந்தித்து முகக்கவசம் வழங்கியிருக்கிறோம். எய்ம்ஸ், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருமங்கலத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். தற்போது எய்ம்ஸ் மதுரைக்கு வருமா? வராதா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ‘வரும்’ என்று நாங்கள் போஸ்டர் ஒட்டினால், ‘வராது’ என எதிர்க்கட்சிகள் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

நாட்டின் உச்சபட்ச அதிகாரமிக்க பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட அனைவராலும் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமையவில்லை என்பதில் எல்லோருக்கும் வருத்தம்தான். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நிதி வழங்கும் ஜப்பானிய நிறுவனம், பல முறை ஆய்வு செய்து, உரிமம் பெறுவதற்குத் தகுதியான இடம் இதுதான் எனச் சான்றளித்துள்ளது.
ஜப்பானிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யும் காலத்தில், கரோனா என்ற அரக்கன் வந்ததால், ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது. விரைவில் ஒப்பந்தம் போடப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா? என்று கேட்டவர்கள்கூட சிகிச்சை பெறக்கூடிய நிலை, விரைவில் வரும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், அதே செல்வாக்கோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற அச்சத்தினால், தவறான தகவல்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது அல்ல. நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. வராத திட்டங்களைச் சொல்லி வாக்குகள் கேட்பவர்கள் நாங்கள் அல்ல. வந்த திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்பதுதான் அதிமுகவுக்கு பழக்கம்.
திருமங்கலம் தொகுதியில் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை. மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க அரசு இயங்குகிற அரசு; முடங்கிக் கிடக்கும் அரசல்ல. 'நிவர்', 'புரவி', 'வர்தா', 'கஜா' என எந்தப் புயல் வந்தாலும், தற்போது வடகிழக்குப் பருவமழையைக் கொண்டுவந்த மக்கள் அலை என்கிற புயல், எங்களுக்கு ஆதரவாக இருப்பதால், 2021-லும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அமையும்.

பதவி முக்கியமா? மதுரையின் வளர்ச்சி முக்கியமா? என்று கேட்டால், மதுரையின் நலனே முக்கியம் என்பேன். மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவோம் என்று நாங்கள் தெரிவித்ததை, நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம், ஆட்சி அமைத்தவுடன் செய்து காட்டுவோம் என்று கூறிவருகிறார்கள்.” என்று கமல்ஹாசனுக்கும் ‘பஞ்ச்’ விட்டார்.