தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவலையோடு கவனித்து வருகிறது திமுக அரசு. அவர்களுக்கு நிதி உதவி வழங்குவதைக் காட்டிலும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்ற முடிவினை சமீபத்தில் எடுத்திருக்கிறது திமுக அரசு.
இந்த நிலையில், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து, ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை இலவசமாக வழங்க வலியுறுத்தியுள்ளது ஆட்சித் தலைமை. அதன்படி, செம்மறி ஆடுகள் (அ) வெள்ளாடுகள் பெறும் பயனாளிகள் என 38,800 பெண்களை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 செம்மறி ஆடுகள் (அ) வெள்ளாடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, 75 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு கால்நடை, பால் வளம், மீன் வளத் துறை அமைச்சகம்.
மீன்கள் தருவதை விட மீன்களைப் பிடிக்க கற்றுத் தாருங்கள் என பிரபல சொல்லாடல் உண்டு. அதேபோல, ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி தருவதையும் விட, அவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றுவதே சிறந்த பணியாக இருக்கும் என்பதை இந்த அரசாணை உணர்த்துகிறது.
கடந்த ஆட்சியில் இதே திட்டம் அமலில் இருந்தது. அதில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்ததால் அந்த திட்டம் குறித்த வில்லங்கங்கள் அம்பலமானது. அதே போல, திமுக அரசிலும் ஊழல்கள் நடக்காமல் இருந்தால் மட்டுமே இது நிஜமாகவே ஆதரவற்ற பெண்களுக்கு பலனளிக்கும் என்கிறார்கள் ஊழல்களுக்கு எதிரான அமைப்பினர்.