ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகள் அமல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் 4 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கண்காணிப்புக் குழுவினர் 30 ந் தேதி ஈரோடு எல்லை மாரியம்மன் கோயில் அருகே அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் வந்த பயணியிடம் ரூபாய் 1 லட்சத்து 200 இருந்தது. அந்த அந்தப் பணத்துக்கு அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ருத்ர சீனிவாசன் என்பதும், ஜவுளி கொள்முதல் செய்ய ரயில் மூலமாக ஈரோடு வந்து, ஜவுளி மார்கெட்டுக்கு ஆட்டோவில் வந்ததும் தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அந்தப் பணத்தை ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல, ஈரோடு பெருந்துறை ரோடு, வீரப்பம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெருந்துறை மார்க்கத்தில் இருந்து வந்த கார் ஒன்றைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் வந்தவரிடம் ரூ. 3 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது தெளபிக் என்பதும், ஜவுளி கொள்முதல் செய்வதற்காக காரில் பணத்துடன் ஈரோடு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் 3 லட்சமும் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 லட்சத்து 200 ஐ உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அவர்களிடம் அறிவுறுத்தினர்.