'நிவர்' புயல் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, மறுகால் ஓடுகிறது. இதனால், கிராம மக்கள் ஏரியில் மீன்பிடித்து அங்கேயே விற்பனை செய்கின்றனர்.
‘ஏலேலோ ஐலசா.. ஏரி மீன் ஐலசா.. ஏ கட்லா வருது ஐலசா...’ என ராகத்தோடு பாட்டுப்பாடி மீன் பிடிக்கும் அவர்களது வலையில், விலாங்கு, கடல், ரோகு, வாவல், பாறை என வகை வகையான மீன்கள் சிக்குகின்றன.
இதுஒருபுறம் இருக்க, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் செல்லும் பாலாற்றில் உள்ள வாலாஜாபாத்- அவலூர் சாலையின் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி, இருபுறமும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.
இதனால், போக்குவரத்தை தடை செய்து பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவலூர், காமராஜபுரம், இளையனார் வேலூர், தம்மனூர், அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 20 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.