ரவுடி படப்பை குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியை அடுத்துள்ள மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். ரவுடி படப்பை குணா என்ற பெயரில் வலம் வந்த இவர் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, அடிதடி, கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். தற்பொழுது வரை 48 வழக்குகள் படப்பை குணா மீது நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எட்டு கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் படப்பை குணா பாஜகவின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சுங்குவார்சத்திரம் அருகே இரும்புக்கடை வியாபாரி ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டு கத்தி முனையில் மிரட்டியதாக புகார் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி படப்பை குணா மீது நான்காவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் படப்பை குணா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி, ஆட்சியருக்கு பரிந்துரை கொடுத்ததின் பேரில் தற்போது ரவுடி படப்பை குணா மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.