சேலம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து குண்டாஸ் கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சேலம் நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவேல் (29), கூலித்தொழிலாளி. குடிப்பழக்கத்தற்கு அடிமையான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தாய் மற்றும் சித்தியை அடித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் ஜன. 16ஆம் தேதி சிறையின் மேல் மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள ஆர்த்தோ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மதுப்பழக்கத்தால் பெற்ற தாயையும், சித்தியையும் ஈவிரக்கமின்றி அடித்துக் கொலை செய்ததால், இனி ஆயுசுக்கும் வெளியே செல்ல முடியாது என சக கைதிகள் அவரிடம் சொன்னதால், கடும் விரக்தியில் இருந்ததாகவும், அதனால் மனம் உடைந்து முத்துவேல் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
சிகிச்சையில் இருந்தபோதும் அவர், தனக்கு வாழ விருப்பமில்லை என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில், ஜன. 27ம் தேதியன்று, மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற அவர், ஜன்னல் வழியாக கீழே எகிறி குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதுகுறித்து மாஜிஸ்ட்ரேட் நேரடியாக விசாரிக்க வேண்டியது நடைமுறை. அதன்படி, சேலம் நீதித்துறை நடுவர் ராஜபிரபு, சேலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஜன. 28) நேரில் விசாரணை நடத்தினார்.
சம்பவத்தின்போது பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சிறைக்காவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டு, கழிப்பறை ஆகியவற்றையும் பார்வையிட்டார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து முத்துவேலின் சடலம் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலத்திலேயே அவருடைய சடலத்தை அடக்கம் செய்தனர்.
மேலும், சேலம் மத்திய சிறையில் எஸ்.பி., மாடியில் இருந்து குதித்தபோது அவரை தூக்கிய கைதிகள், சிறைத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடமும் நீதிமன்ற நடுவர் ராஜபிரபு விசாரணை நடத்தினார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.