மதுரை ஐநாக்ஸ் தியேட்டரில் இன்று இரவு காட்சிக்கு வந்த ரசிகர்கள் லிப்டில் ஏற முயன்றபோது, லிப்ட் வேலை செய்யவில்லை என்று கூறி யாரையும் அதில் ஏற விடவில்லை ஊழியர்கள். இதனால் ரசிகர்கள் ஐந்து மாடி மூச்சிறைக்க ஏறிச்சென்று மேலே தியேட்டர் வாசலில் காத்து நின்றபோது, லிப்ட் இயங்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் திரும்பினர். அப்போது லிப்டில் இருந்து சிலர் வெளியே வந்து பிரத்யேக வழியாக தியேட்டருக்குள் சென்றனர். அவர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் குடும்பத்தினர் என்று பலரும் கிசுகிசுக்கவே, டிடிவி தினகரன் அணியைச்சேர்ந்த அன்பரசன் ஆவேசமானார்.
அவர் மதுரை ஐநாக்ஸ் தியேட்டர் மேனேஜர் செல்வின் எட்வின்குமாரிடம் சென்று, ‘’எல்லோரும் 5 மாடி ஏறி வந்திருக்கிறோம். நாங்க ஓசியிலா வந்திருக்கிறோம். இல்லை அமைச்சர்தான் உங்களுக்கு டிக்கெட்டை விட கூடுதலா கொடுத்திருக்கிறாரா? தியேட்டரில் என்னய்யா ஏற்றத்தாழ்வு’’ என்று கொந்தளித்தார். கூடவே ரசிகர்கள் பலரும் சேர்ந்துகொண்டு ஆவேசத்துடன் கேள்வி கேட்க ஆரம்பிக்கவும்,
நிலைமையை உணர்ந்த மேனேஜர், இனி இப்படி நடக்காது என்று வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.