சாலையோரம் விபத்துகளைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள உலோகத் தடுப்பான்களை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போல் ஏமாற்றி திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரத்தில் விபத்துகளையும், மண் சரிவுகளையும் தடுக்கும் வகையில் உலோகத் தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை சில பகுதிகளில் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டது. சில நாட்களாக இந்த உலோகங்கள் காணாமல் போனது நெடுஞ்சாலைத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை பணியாளர்கள் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பாண்டூர் கிராமத்தின் சாலை பகுதியில் ஐந்து பேர் சந்தேகத்திற்கு இடமாக சாலையோர தடுப்பான்களைக் கழட்டிக் கொண்டிருந்தனர். உடனடியாக போலீசாருக்கு நெடுஞ்சாலைத்துறை தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் ஐந்து பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் சாலையோரத்தில் உள்ள உலோகத் தடுப்பான்களைத் திருடி வண்டிகளில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வந்த வாகனத்தில் 'நெடுஞ்சாலைத் துறை பணிக்காக' என போர்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஐந்து பேரும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அல்ல.
ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், பூபாலன், சங்கர், கார்த்திக், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு நாளுக்கு முன்னதாகவே வந்து உலோகத் தடுப்பான்களின் போல்டுகளை கழட்டி வைத்துவிட்டுச் சென்று விடுவர். அடுத்த நாள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போன்று கழட்டி வைக்கப்பட்ட உலோகத் தடுப்பான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வர். இதுவரை 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத் தடுப்பான்களை இந்த கும்பல் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு இவர்கள் பயன்படுத்திய லாரி மற்றும் மினி வேன் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதேபோன்று வேறு ஏதேனும் இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.