Skip to main content

ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு; அ.தி.மு.க. - தி.மு.க. மல்லுக்கட்டு!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

kumbakonam


கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர், கருப்பு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் சுமார் 89 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குற்றச்சாட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
 


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் 2 ஆவது கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி முன்னிலையில் நடந்தது. மொத்தமுள்ள 27 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அ.தி.மு.க., பா.ஜ.க., உறுப்பினர்கள் 9 பேரும், தி.முக. உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் வந்திருந்தனர். தி.மு.க. உறுப்பினர்கள் 5 பேர் வரவில்லை. மீதமுள்ள ஒரு உறுப்பினரான 24 வது வார்டு உறுப்பினர் சுகுமார் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இறந்துவிட்டார்.

கரோனா விவகாரத்திற்கு இடையே நடந்த கூட்டத்தில் இறந்த உறுப்பினரான சுகுமாரனுக்கு அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 119 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு ஊராட்சிகளில் சாலை வசதிகள், குளங்கள், சுற்றுச்சுவர்கள், ஈமகிரியை மண்டபம் கட்டுதல் உட்பட ரூபாய் 2 கோடியே 72 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்பிலான 50 பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றினர். மேலும் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்கிட அரசிற்கு கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

 

kumbakonam  22


இதற்கிடையில் கரோனோ நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கொள்முதல் செய்யப்பட்ட கிருமிநாசினி, சுண்ணாம்பு பவுடர், பிளீச்சிங் பவுடர், கருப்பு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு ஒன்றியமும் செலவழித்திடாத வகையில் ரூபாய் 89 லட்சம் செலவிட்டிருப்பதாக பல்வேறு தீர்மானங்களுக்கு இடையே கூறப்பட்டிருந்தது.

இதனைப் படித்துப் பார்த்த அ.தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்துப் பேச, பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்களும் பேசினர். பேச்சு கடுமையான வாக்குவாதமாக மாறி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. "பொருட்கள் வாங்கியதற்கான சான்று ஆவணங்களைக் கூட்டத்தில் வைக்கவில்லை என்றும், கணினி மென்பொருள் நிறுவனத்தில் இருந்து கிருமி நாசினி வாங்கியதாகக் குறிப்பிட்டு இருப்பதுமே இதில் முறைகேடு நடந்திருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது" எனக் குற்றம்சாட்டி முழக்கமிட்டனர். இதனால் போலிஸார் குவிக்கப்பட்டனர்.
 

http://onelink.to/nknapp


செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள், "இது குறித்து விரைவில் நாங்கள் அனைவரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடவுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

ஏற்கனவே காயத்திரி அசோக்குமார் ஒன்றியக்குழு தலைவராக பதவி ஏற்றபோது, முதல் கூட்டத்தை யாகம் நடத்தி துவங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து நடந்த இரண்டாவது கூட்டமே மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்