திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 27 அன்று நடைபெற்றது. சனி செவ்வாய் சேர்க்கைப் பெற்ற நாளில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு ஆபத்து என ஒரு தரப்புப் போராடி வந்த வேளையில், அதனையும் மீறி கும்பாபிஷேகத்தை நடத்தியது அறநிலையத்துறை. இது ஒரு புறமிருக்க, கும்பாபிஷேகம் நடந்த அதே நாளில் காப்புக்கட்டியவர்களே ஏறுவதற்குத் தயங்கும் சுவாமியின் கருவறையின் மேல் ஏறினார் ஆளுங்கட்சியின் பெண் எம்.பி.க்களான விஜிலான சத்தியானந்தும், வசந்தி முருகேசனும். இதுவும் தவறான செயல் என போர்க்கொடி தூக்கியது பெரும்பாலான இந்து அமைப்புக்கள். ஆளுங்கட்சியினர் என்பதால் அந்த விஷயம் அமுக்கப்பட்டது.
இது இப்படியிருக்க., அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் இருக்கும் " சந்திரன் " விக்கிரகத்தின் இடது கை உடைந்துள்ளது. இதை மாற்றாமலும், பின்னமான விக்ரகத்தை பழுது பார்க்காமலும், அதே விக்ரகத்தை வைத்து கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்து விட்டது அறநிலையத்துறை. பின்னப்பட்ட விக்ரகத்தை வழிபாடு செய்யக்கூடாது. அப்படி செய்தால் தீமையே.! என்பது ஆன்மிகத்தில் கூறப்படும் வலுவான கருத்து. ஆனால், அதே விக்கிரத்தை கொண்டு கும்பாபிஷேகமும் முடித்துவிட்டதோடு மட்டுமில்லாமல், பக்தர்கள் வழிபாட்டிற்கும் வைத்துள்ளனர் கோவில் நிர்வாகத்தினர். இதனால் ஆட்சிக்குத் தான் கேடு என்கின்றனர் ஜோதிடர்கள். என்ன செய்யப் போகிறது நிர்வாகம்??